< Back
தேசிய செய்திகள்
மேகாலயா இடைத்தேர்தல்: காம்பேக்ரே தொகுதியில் முதல் மந்திரியின் மனைவி வெற்றி
தேசிய செய்திகள்

மேகாலயா இடைத்தேர்தல்: காம்பேக்ரே தொகுதியில் முதல் மந்திரியின் மனைவி வெற்றி

தினத்தந்தி
|
23 Nov 2024 3:46 PM IST

மேகாலயா மாநிலம் காம்பேக்ரே சட்டசபை தொகுதிக்கு கடந்த 13-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

அகர்தலா,

மராட்டியம் மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலுடன் 13 மாநிலங்களுக்கு உட்பட்ட 46 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இதில், மேகாலயா மாநிலம் காம்பேக்ரே சட்டசபை தொகுதிக்கு கடந்த 13-ந்தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

மேகாலயாவில் பாஜக ஆதரவுடன் தேசிய மக்கள் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த இடைத்தேர்தலில் தேசிய மக்கள் கட்சி வேட்பாளராக முதல் மந்திரி கான்ராட் சங்மாலின் மனைவி மெஹ்தாப் பூண்டி சங்மா போட்டியிட்டார்.

இந்த நிலையில், இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில், மெஹ்தாப் சண்டி சங்மா, 4,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் மொத்தம் 12,679 வாக்குகளைப் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் சதிராணி எம் சங்மா 8,084 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். காங்கிரசின் ஜிங்ஜாங் மரக் 7,695 வாக்குகளைப் பெற்றார்.

மனைவியின் வெற்றி குறித்து முதல் மந்திரி கே சங்மா கூறுகையில், "காம்பேக்ரே மக்கள் வளர்ச்சிக்காக வாக்களித்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அதற்காக நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இந்தச் சந்தர்ப்பத்தில் காம்பேக்ரே மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். வாக்காளர்கள் புத்திசாலிகள், அவர்களுக்கு எது நல்லது, எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது தெரியும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்