மணிப்பூர் தொடர்பாக அவசர ஆலோசனை; மராட்டிய தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு டெல்லி புறப்பட்ட அமித்ஷா
|மத்திய மந்திரி அமித்ஷா மராட்டிய மாநிலத்தில் தனது பிரசார பணிகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
புதுடெல்லி,
மராட்டிய மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 20-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க., சிவசேனா( ஷிண்டே) மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய ஆளும் 'மகாயுதி' கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா(உத்தவ்), தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) ஆகிய எதிர்க்கட்சிகளின் 'மகாவிகாஸ் அகாடி' கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
தேர்தலை முன்னிட்டு மராட்டிய மாநிலத்தில் அரசியல் கட்சியினர் தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மராட்டிய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு 'மகாயுதி' கூட்டணி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்து வருகிறார். இன்றைய தினம் விதர்பாவில் அவர் பிரசாரம் மேற்கொள்ள இருந்தார்.
இதற்கிடையில் மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக அரங்கேறி வரும் வன்முறை சம்பவங்களால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. குறிப்பாக ஜிரிபாம் மாவட்டத்தில் 6 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அங்கு கூடுதலாக பாதுகாப்பு படைகளை அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மராட்டிய மாநிலத்தில் தனது பிரசார பணிகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு டெல்லி புறப்பட்டுச் சென்றார். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் நடைபெறும் அவசர ஆலோசனையில் கலந்து கொள்வதற்காக அவர் டெல்லி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமித்ஷாவுக்கு பதிலாக முன்னாள் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி மற்றும் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.