< Back
தேசிய செய்திகள்
பருவநிலை மாற்றத்திற்காக தியானம்... வெப்ப தாக்கத்திற்கு பலியான பாபா சாமியார்
தேசிய செய்திகள்

பருவநிலை மாற்றத்திற்காக தியானம்... வெப்ப தாக்கத்திற்கு பலியான பாபா சாமியார்

தினத்தந்தி
|
28 May 2024 4:56 PM IST

உலக அமைதி, நலன் மற்றும் போதை அடிமை வாழ்வில் இருந்து விடுதலையாவது உள்ளிட்ட நோக்கங்களுக்காக சாமியார் பாபா உண்ணா நோன்பும் இருந்துள்ளார்.

பரேலி,

உத்தர பிரதேசத்தின் அமேதி பகுதியை சேர்ந்த சாமியார் ஒருவர் பக்தர்களால் கமலி வாலே பாகல் பாபா (வயது 72) என அழைக்கப்பட்டார். இவர் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மக்களின் நன்மைக்காக, தியானத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

கடந்த 25 ஆண்டுகளாக குறைந்தது 23 முறை இதுபோன்ற தியானத்தில் அவர் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்த முறை பருவநிலை மாற்றத்திற்காக இந்த தியானம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்காக, பேனிப்பூர் சக் கிராமத்தில் உள்ள ஆசிரமம் ஒன்றில் அக்னியை வளர்த்து தியானத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.

உலக அமைதி, நலன் மற்றும் போதை அடிமை வாழ்வில் இருந்து விடுதலையாவது உள்ளிட்ட நோக்கங்களுக்காக உண்ணா நோன்பும் இருந்துள்ளார். இதற்காக, அரசு நிர்வாகத்திடம் இருந்து முறையாக முன் அனுமதியும் பெற்றிருக்கிறார்.

கடந்த 23-ந்தேதி தொடங்கிய அவருடைய இந்த தியானம் நேற்றுடன் நிறைவு பெற இருந்தது. ஆனால், அதற்குள் அவர் வெப்ப பாதிப்புக்கு ஆளாகி, சுயநினைவிழந்து போனார். அவரை சிகிச்சைக்கு கொண்டு சென்றபோது, அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவர் நெருப்பு வளையத்திற்குள் அமர்ந்து இருந்த காரணத்தினால், வெப்ப தாக்கத்திற்கு ஆளாகி இருக்க கூடும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். உத்தர பிரதேசத்தில் பல்வேறு பகுதிகளில் மதிய வேளையில் கடுமையான வெப்பநிலையை முன்னிட்டு, எச்சரிக்கையாக இருக்கும்படி மக்களுக்கு அரசு அறிவுரை வழங்கி இருந்தது.

ஆனால், பகல் முழுவதும் வெப்ப தாக்கத்திலேயே அவர் தியானத்தில் ஈடுபட்டதுடன், உண்ணா நோன்பும் இருந்துள்ளார். இதுபோக, ஆம்புலன்சை தொலைபேசி வழியே அழைத்தபோதும் அரை மணிநேரம் கழித்தே வந்து சேர்ந்துள்ளது. இதுபோன்ற விசயங்களும் அவரை காப்பாற்ற முடியாமல் போனதற்கான காரணங்களாக கூறப்படுகின்றன.

மேலும் செய்திகள்