< Back
தேசிய செய்திகள்
ராஜஸ்தானில் மருத்துவ மாணவர் தற்கொலை - தேர்வை மோசமாக எழுதியதால் விபரீத முடிவு
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் மருத்துவ மாணவர் தற்கொலை - தேர்வை மோசமாக எழுதியதால் விபரீத முடிவு

தினத்தந்தி
|
3 Dec 2024 9:49 PM IST

ராஜஸ்தானில் மருத்துவ மாணவர் விடுதியின் 6-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அம்பேத்கர் மருத்துவ கல்லூரியில் ராகுல் குமார் கராசியா என்ற மாணவர் எம்.பி.பி.எஸ். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். ராஜஸ்தானில் உள்ள பாலி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.

கல்லூரியில் தற்போது தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று இரவு 2.30 மணி வரை ராகுல் குமார் தனது விடுதி அறையில் படித்துக் கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் சுமார் 3 மணியளவில் விடுதியின் 6-வது மாடியில் இருந்து கீழே குதித்து ராகுல் குமார் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், ராகுல் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து அங்குள்ள மாணவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கல்லூரியில் 2 நாட்களுக்கு முன்பு நடந்த தேர்வை சரியாக எழுதவில்லை என்று கூறி ராகுல் குமார் மிகவும் கவலையில் இருந்து வந்ததாக தெரிவித்துள்ளனர்.

எனவே தேர்வை மோசமாக எழுதியதால் மாணவர் மனமுடைந்து இந்த விபரீத முடிவை எடுத்தாரா? அல்லது இதற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்