< Back
தேசிய செய்திகள்
மலையாள திரையுலகில் தொடரும் பாலியல் புகார்கள்: செய்தியாளர்களிடம் ஆத்திரப்பட்ட மந்திரி சுரேஷ் கோபி
தேசிய செய்திகள்

மலையாள திரையுலகில் தொடரும் பாலியல் புகார்கள்: செய்தியாளர்களிடம் ஆத்திரப்பட்ட மந்திரி சுரேஷ் கோபி

தினத்தந்தி
|
27 Aug 2024 1:49 PM IST

மலையாள திரையுலகம் பற்றிய பொதுமக்களின் கருத்தை ஊடகங்கள் தவறாக வழிநடத்துவதாக மத்திய மந்திரி சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

தென்னிந்திய திரையுலகில் பிரபலமாக இருக்கும் ஒரு நடிகை மீது கடந்த 2017-ம் ஆண்டு நடத்தப்பட்ட பாலியல் ரீதியான தாக்குதல் இந்த பிரச்சினைக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தது. இதில் கேரள சினிமாவின் முன்னணி நடிகர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக கேரள சினிமாத்துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள், பாலின பாகுபாடுகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிஷனின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. அதில் பெரும் அதிர்ச்சியளிக்கும் விஷயங்கள் இடம்பெற்றிருந்தன.

குறிப்பாக, மலையாளத் திரையுலகில் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகமாக இருப்பதாகவும், இது நடிகைகளுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது. பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் கலாசாரம் அதிகமாக இருப்பதை நீதிபதி ஹேமா கமிட்டி வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. மலையாள திரையுலகில் முன்னணியில் இருக்கும் நடிகர்கள் கூட இந்த குற்றங்களில் ஈடுபட்டு இருப்பதாகவும் அதில் கூறப்பட்டு உள்ளதாக தெரிகிறது. எனவே இந்த அறிக்கை கேரளாவை கடந்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது.

இந்த அறிக்கை வெளியானதில் இருந்து மலையாள திரையுலகில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளது. அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் மலையாள சினிமா உலகினரை சாடி வருகின்றனர். மறுபுறம் மலையாள திரையுலகினரால் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் இன்னல்களை நடிகைகள் வெளிப்படையாக கூறத்தொடங்கி உள்ளனர்.

இதற்கிடையே இந்த பாலியல் குற்றச்சாட்டுகள் மாநில அரசுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே இது தொடர்பாக நேற்று முன்தினம் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் போலீஸ் டி.ஜி.பி. உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி நடிகைகளின் பாலியல் புகார் தொடர்பாக விசாணை நடத்த போலீஸ் ஐ.ஜி. ஸ்பர்ஜன் குமார் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் விசாரணை தொடங்கி உள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக மலையான சினிமாவின் மூத்த நடிகரும், மத்திய மந்திரியுமான சுரேஷ் கோபியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு கோபமாக பதில் அளித்த அவர், "நான் புரிந்து கொண்டது வகையில் இது எல்லாம் உங்களுக்கான தீனி மாதிரி. இதை பயன்படுத்தி உங்களால் பணம் சம்பாதிக்க முடியும். அதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் இந்த பிரச்சினைகள் நீதிமன்றத்தின் முன் உள்ளன. நீங்கள் (ஊடகங்கள்) உங்களுடைய சொந்த ஆதாயங்களுக்காக மக்களை ஒருவருக்கொருவர் சண்டையிட வைப்பது மட்டுமல்லாமல், சினிமா துறையின் மீதான பொதுமக்களின் பார்வையையும் தவறாக வழி நடத்துகிறீர்கள். புகார்கள் தற்போது குற்றச்சாட்டு வடிவில் உள்ளன. நீங்கள் மக்களுக்கு என்ன சொல்கிறீர்கள்? நீங்கள் நீதிமன்றமா? நீதிமன்றம் முடிவு செய்யும். நீதிமன்றம் முடிவு செய்யட்டும்" என்று சுரேஷ் கோபி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்