சனாதன தர்மம் குறித்து பேசிய விவகாரம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நிபந்தனை ஜாமீன்
|இன்று ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்க வாய்ப்பு உள்ளது என்பதால் நேரில் ஆஜரானார்.
பெங்களூரு,
சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போல் ஒழிக்க வேண்டும் என்று பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பெங்களூருவைச் சேர்ந்த பரமேஷ் என்பவர் பெங்களூருவில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக ஆஜராகுமாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 2 முறை சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.
இதையடுத்து நேரில் ஆஜராக வேண்டுமென தொடர்ந்து 3-வது முறையாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அவர் இன்று ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், சனாதனம் குறித்து சர்ச்சை கருத்து பேசியது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கர்நாடக கோர்ட்டில் இன்று ஆஜரானர். எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு கோர்ட்டில் அவர் ஆஜரானார். இதையடுத்து அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ரூ.1 லட்சம் பிணைத்தொகையுடன் ஜாமீன் வழங்கிய கோர்ட்டு, வழக்கின் விசாரணையை ஆகஸ்டு 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.