மராட்டியம்: மசாஜ் செய்ய கூறிய மகன்; மறுத்த தந்தை அடித்து கொலை
|மராட்டியத்தில் தந்தையிடம் கால் பாதத்தில் மசாஜ் செய்து விடும்படி மகன் கூறியபோது, அவர் அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
நாக்பூர்,
மராட்டியத்தின் நாக்பூர் நகரில் உள்ள நவாப்புரா பகுதியை சேர்ந்தவர் தத்தாத்ரேயா ஷெண்டே. இவருக்கு பிரணவ் மற்றும் குஷால் ஷெண்டே என 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், தந்தை தத்தாத்ரேயாவிடம் மகன் குஷால், கால் பாதத்தில் மசாஜ் செய்து விடும்படி கூறியிருக்கிறார். ஆனால், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த குஷால் தந்தையை கடுமையாக தாக்க தொடங்கியிருக்கிறார்.
அவரை தடுக்க பிரணவ் முயன்றிருக்கிறார். ஆனால், பிரணவை குஷால் மிரட்டியிருக்கிறார். இதில், பயந்து போன பிரணவ், பக்கத்து வீட்டுக்காரர்களிடம் உதவி கேட்பதற்காக ஓடியிருக்கிறார். இதன்பின் மீண்டும் வீட்டுக்கு திரும்பியபோது, அவருடைய தந்தை படுகாயங்களுடன் தரையில் சுயநினைவின்றி கிடந்துள்ளார்.
உடனடியாக அவரை மேயோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் கொலை செய்த குற்றச்சாட்டின்பேரில் குஷால் கைது செய்யப்பட்டார். அவரை இன்று வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.