மராட்டியம்: அகர்பத்தி கொளுத்திய விவகாரத்தில் அடிதடி; 3 பேர் காயம்
|அரசு பதவியை சுக்லா தவறாக பயன்படுத்தி மிரட்டலில் ஈடுபட்டார் என குடியிருப்புவாசிகள் குற்றச்சாட்டாக கூறினர்.
மும்பை,
மராட்டியத்தின் மும்பை நகரில் கல்யாண் அஜ்மீரா ஹைட்ஸ் பகுதியில் மராத்தி பேசும் மக்கள் மற்றும் மராத்தி பேசாத மக்கள் என பலர் ஒன்றாக வீட்டு வசதி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அரசு பணியாளரான அகிலேஷ் சுக்லா என்பவர் அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே அகர்பத்தி கொளுத்தியிருக்கிறார். அதன் புகை மற்ற இடங்களுக்கு பரவியுள்ளது. இதனால், சிலருக்கு இடையூறு ஏற்பட்டு உள்ளது. அவர்களில், விஜய் கல்விகாதே, அபிஜீத் தேஷ்முக் மற்றும் ஒருவர் சென்று சுக்லாவிடம் இதனை நிறுத்தும்படி வேண்டுகோளாக கேட்டிருக்கின்றனர்.
ஆனால், அவர் மறுத்திருக்கிறார். சிறிய வாக்குவாதம் முற்றி, பெரிய தகராறில் முடிந்தது. 10 முதல் 15 பேரை சுக்லா அழைத்து வந்திருக்கிறார். அவர்கள் ஆயுதங்களுடன் கல்விகாதே மற்றும் பிறரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் தேஷ்முக்கிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. தீரஜ் மற்றும் கல்விகாதேவுக்கு லேசான காயம் ஏற்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
சுக்லா அவருடைய அரசு பதவியை தவறாக பயன்படுத்தி மிரட்டலில் ஈடுபட்டார் என அந்த குடியிருப்பு பகுதிகளில் உள்ளவர்கள் குற்றச்சாட்டாக கூறினர். கடந்த காலங்களிலும் இளம்பெண் ஒருவரை, அவருடைய தந்தையின் முன்னிலையிலேயே அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டிருக்கிறார்.
இதனால், அவருக்கு எதிராக பேசவே அந்த பகுதி மக்கள் பயந்து போயுள்ளனர். இந்நிலையில், சுக்லாவுக்கு எதிராக வழக்கு ஒன்று பதிவாகி உள்ளது என மராட்டிய முதல்-மந்திரி பட்னாவிஸ் கூறியுள்ளார். அவரை சஸ்பெண்டு செய்வதற்கான பணியும் நடந்து வருகிறது என கூறினார். சுக்லா உள்ளிட்ட 3 பேர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர். புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.