நீர்வீழ்ச்சியின் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்ட 5 பேர் பலி - அதிர்ச்சி வீடியோ
|மராட்டியத்தில் நீர்வீழ்ச்சி நீரில் அடித்து செல்லப்பட்ட 2 சிறுவர்களை மீட்கும் பணி நாளை காலை மீண்டும் நடைபெறும் என காவல் நிலைய அதிகாரி கூறியுள்ளார்.
புனே,
மராட்டியத்தின் புனே நகரில் லோனாவாலா பகுதியில் பூஷி அணை உள்ளது. இயற்கை சூழல் நிறைந்த இந்த அணையை சுற்றுலாவாசிகள் வந்து பார்வையிட்டு செல்வது வழக்கம். இந்த பகுதிக்கு ஒரே குடும்ப உறுப்பினர்களான பெண் ஒருவர், 4 சிறுவர் சிறுமிகள் என 5 பேர் இன்று நண்பகல் 12.30 மணியளவில் சென்றுள்ளனர்.
இந்நிலையில், கனமழை எதிரொலியாக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதில், அவர்கள் 5 பேரும் திடீரென சிக்கி கொண்டனர். இதனால், சுற்றியிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.
எனினும், அவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அவர்கள், ஹடாப்சார் பகுதியை சேர்ந்த அன்சாரி குடும்ப உறுப்பினர்கள் என தெரிய வந்துள்ளது. நீர்வீழ்ச்சியை அணைக்கு அருகே சென்று பார்க்க அவர்கள் விரும்பியுள்ளனர்.
இதில், ஷாயிஸ்டா அன்சாரி (வயது 36), அமீமா அன்சாரி (வயது 13) மற்றும் உமேரா அன்சாரி (வயது 8) ஆகிய 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. அட்னான் அன்சாரி (வயது 4) மற்றும் மரியா சையது (வயது 9) ஆகிய 2 பேரை காணவில்லை.
இந்நிலையில், இரவான நிலையில் மீட்பு பணி நிறுத்தப்பட்டு உள்ளது. நாளை காலை மீட்பு பணி மீண்டும் நடைபெறும் என லோனாவாலா காவல் நிலைய அதிகாரி கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.