
மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடைய அமைப்பின் தலைவனை அடித்துக்கொன்ற கிராம மக்கள்

மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடைய அமைப்பின் தலைவனை கிராம மக்களே அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கத்தை ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இதனிடையே, அம்மாநிலத்தில் ஜார்க்கண்ட் சங்கர்ஷ் முக்தி மோர்ச்சாதே அமைப்பு மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடைய இயக்கமாகும். அந்த அமைப்பின் தலைவரான கிஷோர் என்ற நபர் தனது கூட்டாளிகளுடன் லெட்கர் மாவட்டம் சண்ட்வா கிராமத்திற்கு நேற்று சென்றுள்ளார். அங்கு உள்ள செங்கல் சூளைக்கு சென்ற கிஷோர் அங்கு வேலை செய்துகொண்டிருந்த கிராமத்தினரிடம் பணம் தருமாறு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் கிஷோரையும் அவரது கூட்டாளிகளையும் கடுமையாக தாக்கினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் கிஷோர் சம்பவ இடத்திலேயே உயிரழந்தார். அவரது கூட்டாளிகள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும்,இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.