மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம்: இடத்தை தேர்வு செய்யும் பணி தொடக்கம்
|மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
புதுடெல்லி,
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் கடந்த மாதம் 26-ந்தேதி உயிரிழந்தார். அவரது உடல் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ள நிகம்போத் காட் பகுதியில் முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.
இதனிடையே மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியிருந்தார். இதையடுட்டு, மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைப்பதற்கு இடம் ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இது தொடர்பான தகவல் மன்மோகன் சிங்கின் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் தலைவரிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன்படி நினைவிடம் அமைப்பதற்காக ராஜ்காட், ராஷ்டிரிய ஸ்மிரிதி தளம் அல்லது கிசான் காட் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு இடத்தை தேர்வு செய்யும்படி மன்மோகன் சிங்கின் குடும்பத்தினரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.