மணிப்பூரில் நாளை முதல் பள்ளி - கல்லூரிகள் திறப்பு
|மணிப்பூரில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இம்பால்.
மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி இனக்குழுக்களுக்கு இடையேயான மோதல், கலவரமாக வெடித்து 1½ ஆண்டு கடந்து விட்டது. ஆனால் அங்கு இன்னும் வன்முறை ஓய்ந்தபாடில்லை. கலவரத்தை கட்டுப்படுத்தி அமைதியை மீட்டெடுக்க மாநிலம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இருந்தபோதிலும் அங்கு தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இதனிடையே வடகிழக்குப் பகுதியில் நவ.11 -ம் தேதி இருவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். மேலும் மூன்று பெண்கள் மற்றும் 3 குழந்தைகளை கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்றனர். அவர்களை மீட்கக் கோரி மணிப்பூரின் ஜிரிபம் மாவட்டத்தில் நவ.16ல் கலவரம் மூண்டது. இந்தக் கலவரத்தால் பலர் பாதிக்கப்பட்டனர்.
சட்டம்-ஒழுங்கு சீர்கெடுவதைத் தடுக்கும் வகையில் மணிப்பூரின் பதற்றமான பகுதிகளில் நவ.16 முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இணைய சேவை துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் நிலைமை சற்று இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் மீண்டும் கல்வி நிறுவனங்கள் செயல்படுவதற்கான அறிக்கையைப் பள்ளிக்கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, அரசு, அரசு உதவிபெறும், தனியார் மற்றும் மத்தியப் பள்ளிகள் அனைத்தும் நவம்பர் 29 முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரின் தௌபால், பிஷ்னுபூர், கக்சிங் இம்பால் மற்றும் ஜிரிபாம், ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகள் 13 நாட்களுக்கு பிறகு நாளை முதல் மீண்டும் வழக்கம்போல் செயல்பட உள்ளது.