மணிப்பூர் கலவரம்: இம்பாலில் ஊரடங்கு அமல்; முதல்-மந்திரி வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு
|மணிப்பூரில் சட்டம் மற்றும் ஒழுங்கை மீண்டும் கொண்டு வருவதற்கான உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகயை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
இம்பால்,
மணிப்பூரில் மெய்தி இன சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல்கள் ஏற்பட்டன. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 240 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். இதனை தொடர்ந்து, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், பல மாதங்களுக்கு பின்னர் மணிப்பூரின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 2 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 6 பேர் பலியானார்கள். இதனால், ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்வேறு இடங்களிலும் வன்முறையில் ஈடுபட்டனர். இதில், முதல்-மந்திரி பைரன் சிங்கின் வீட்டை கும்பல் ஒன்று முற்றுகையிட முயற்சித்தது.
இதனால், பாதுகாப்பு படையினர் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர். அவர்கள், ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதுதவிர, 3 மந்திரிகள் மற்றும் 6 எம்.எல்.ஏ.க்களின் வீடுகளையும் அந்த கும்பல் தாக்கியது. அவர்களின் சொத்துகளையும் சூறையாடியது. இதன் தொடர்ச்சியாக, இம்பால் கிழக்கு மற்றும் இம்பால் மேற்கு, பிஷ்ணுப்பூர், தவுபால் மற்றும் காக்சிங் உள்பட 7 மாவட்டங்களில் இணையதள சேவையை மணிப்பூர் அரசு இன்று சஸ்பெண்டு செய்துள்ளது.
மணிப்பூரில் 6 பேர் படுகொலையான சம்பவம் எதிரொலியாக, இம்பால் மேற்கு மற்றும் இம்பால் கிழக்கு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால், தெருக்களில் வாகன போக்குவரத்தும் குறைந்து காணப்படுகிறது.
முதல்-மந்திரி பைரன் சிங்கின் வீடு மற்றும் கவர்னர் மாளிகையை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், நாகலாந்து பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சட்டம் மற்றும் ஒழுங்கை மீண்டும் கொண்டு வருவதற்கான உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
இந்நிலையில், வீடுகளை முற்றுகையிட்டு, தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த 23 பேரை மணிப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கி, தோட்டாக்கள், 8 மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த சூழலில், அடுத்த உத்தரவு வரும் வரை இம்பால் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக உடனடியாக, 2 நாட்களுக்கு இணையதளம் மற்றும் மொபைல் வழியேயான இணையதள சேவைகள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளன.