மணிப்பூரில் ஊரடங்கை மீறி போராட்டம்.. அரசு அலுவலகங்களை இழுத்துப் பூட்டினர்
|மெய்தி சமூகத்தின் செல்வாக்குமிக்க அமைப்பான மணிப்பூர் ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்புக் குழு அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.
இம்பால்:
மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே நிலவி வந்த மோதல் தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த ஆண்டு மே மாதம் ஏற்பட்ட பெரும் கலவரத்திற்கு பிறகு, பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டு வன்முறை ஓரளவு தணிந்தது. எனினும் குகி மற்றும் மெய்தி இனத்தை சேர்ந்த பயங்கரவாத குழுக்கள் பரஸ்பரம் தாக்குதல்களில் ஈடுபடுவதால் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஜிரிபம் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த படுகொலைகளைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது. வன்முறையை கட்டுப்படுத்த தவறியதாக கூறி, மாநில அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மந்திரி, எம்.எல்.ஏ.க்களின் வீடுகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். வன்முறை மற்ற மாவட்டங்களுக்கும் பரவத் தொடங்கிய நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு, பிஷ்னுபூர், தவுபால் மற்றும் காக்சிங் மாவட்டங்களில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பாதுகாப்பிற்காக கூடுதலாக மத்திய பாதுகாப்பு படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள 5 மாவட்டங்கள் மற்றும் காங்போப்கி, சுராசந்த்பூர் மாவட்டங்களில் இணையதளம், மொபைல் டேட்டா சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் ஊரடங்கு உத்தரவையும் மீறி இன்று ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். இம்பால் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பெரும்பான்மை இனக்குழுவான மெய்தி சமூகத்தின் செல்வாக்குமிக்க அமைப்பான
மணிப்பூர் ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்புக் குழு அமைப்பைச் சேர்ந்தவர்கள் இம்பால் மேற்கு மாவட்டத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களின் பிரதான கதவுகளை இழுத்து பூட்டி போராட்டம் நடத்தினர்.
ஜிரிபம் மாவட்டத்தில் பழங்குடியின பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நீதி கோரி போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர்.