மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கி சூடு; விவசாயி காயம்
|இம்பால் மாவட்டத்தில் வயல்களில் பணிபுரியும் விவசாயிகள் மீது தொடர்ந்து மூன்றாவது நாளாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இம்பால்,
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்தில் மெய்தி மற்றும் குகி என இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 240 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். ஏறக்குறைய 18 மாதங்களாக இந்த பகுதியில் இரு குழுவினருக்கும் இடையே மோதல்கள் நடைபெறுவதும், பின்னர் அமைதி ஏற்படுவதும் காணப்படுகிறது.
இந்நிலையில், மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த விவசாயி ஒருவர் மீது இன்று காலை குகி பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் அவர் காயமடைந்தார். பாதுகாப்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பதில் தாக்குதல் நடத்தினர்.
இதனால் அங்கு இருத்தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. காயமடைந்த விவசாயி, யைங்காங்போக்பி பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். இருப்பினும் அவர் தற்போது ஆபத்தில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்பால் மாவட்டத்தில் வயல்களில் பணிபுரியும் விவசாயிகள் மீது தொடர்ந்து மூன்றாவது நாளாக குகி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.