< Back
தேசிய செய்திகள்
மணிப்பூர் கலவரம்: மன்னிப்பு கோரிய முதல் மந்திரி.. இணைந்து வாழுமாறு மக்களுக்கு வேண்டுகோள்
தேசிய செய்திகள்

மணிப்பூர் கலவரம்: மன்னிப்பு கோரிய முதல் மந்திரி.. இணைந்து வாழுமாறு மக்களுக்கு வேண்டுகோள்

தினத்தந்தி
|
31 Dec 2024 5:30 PM IST

கடந்த கால தவறுகளை மன்னித்து, மறந்து, மக்கள் ஒன்றாக வாழ வேண்டுமென மணிப்பூர் முதல் மந்திரி பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

இம்பால்,

மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து மெய்தி மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கலவரத்தை கட்டுப்படுத்த பாதுகாப்புப்படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. தற்போது மணிப்பூரில் இயல்புநிலை திரும்பி வருகிறது. ஆனால் அவ்வப்போது பாதுகாப்புப்படையினரை குறிவைத்து கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது

இந்த நிலையில், 250க்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கிய இன மோதலுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக அம்மாநில முதல் மந்திரி பிரேன் சிங் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், இது தொடர்பாக மேலும் கூறி இருப்பதாவது;

"மாநிலத்தில் நடந்த கலவரத்துக்கு நான் வருந்துகிறேன். பலர் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தனர். பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. இதற்காக நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். கடந்த மூன்று-நான்கு மாதங்களில் மாநிலத்தில் ஒப்பீட்டளவில் அமைதி நிலவி வருகிறது. வரும் ஆண்டில் இயல்பு நிலை திரும்பும் என்று நம்புகிறேன்.

என்ன நடந்ததோ அது நடந்துவிட்டது... அனைத்து சமூக மக்களும் கடந்த கால தவறுகளை மன்னித்து மறந்து, அமைதியான மற்றும் வளமான மணிப்பூரில் ஒன்றாக வாழ வேண்டும்.வாழ்க்கையை புதிதாகத் தொடங்க வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்