காதலியை குத்திக் கொன்றுவிட்டு போலீசில் சரணடைந்த நபர் - அதிர்ச்சி சம்பவம்
|காதலியை கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞர் போலீசில் சரணடைந்தார்.
குருகிராம்,
அரியானா மாநிலம் குருகிராம் அருகே சதார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திக்ரி கிராமத்தில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் நேற்று முன்தினம் இரவில் 22 வயது பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து தடய அறிவியல் மற்றும் கைரேகை குழுவினருடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு தலை மற்றும் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் அந்த பெண் கிடந்தார். இதையடுத்து அந்த பெண்ணின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று சதார் காவல் நிலையத்துக்கு வந்த நபர் ஒருவர், அந்த பெண்ணை நான் தான் கொலை செய்தேன் என்று கூறி சரணடைந்தார்.
விசாரணையில் இருவரும் மராட்டிய மாநிலம் அகோலா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. இருவரும் காதலித்து வந்த நிலையில், அந்த பெண் மராட்டியத்தில் அந்த நபருக்கு எதிராக பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்ததாகவும், அவரை மிரட்டி வந்ததாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவரை சந்திப்பதற்காக அந்த பெண் குருகிராம் வந்துள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரத்தில் அவர், அந்த பெண்ணை குத்திக் கொலை செய்ததாக தெரிவித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அந்த நபரை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.