காலையில் கரம் பிடித்த காதல் தம்பதி, மாலையில் கத்தியால் குத்திக்கொண்ட பரிதாபம்...
|புதுமண தம்பதி ஒருவரையொருவர் கத்தியால் குத்திக்கொண்டதில் இளம்பெண் உயிரிழந்தார்.
கோலார்,
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் ஆண்டர்சன்பேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட கெம்பாபுராவை அடுத்த செம்பரகானஹள்ளி கிராமத்தை சேர்ந்த நவீன்குமார் என்பவருக்கும் லிகிதா ஸ்ரீ என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது பின்னர் காதலாக மாறியது. இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இவர்களது திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தநிலையில் நேற்று காலை பெற்றோர்கள் முன்னிலையில் 2 பேருக்கும் விமரிசையாக திருமணம் நடந்து முடிந்தது.
பிறகு, தம்பதியினர் மாலையில் தேநீர் அருந்துவதற்காக உறவினர் வீட்டுக்குச் சென்றனர். அப்போது அங்கு, லிகிதாவுக்கும், நவீன் குமாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனையடுத்து இருவரும் ஒருவரையொருவர் கத்தியால் குத்திக்கொண்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், ரத்த காயத்தில் சுருண்டு கிடந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் லிகிதா ஸ்ரீ உயிரிழந்தார்.
இதையடுத்து குடும்பத்தினர் நவீன் குமாரை மீட்டு கோலார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு நவீன் குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த ஆண்டர்சன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.