சமையல் செய்ய தாமதமானதால் ஆத்திரம்: மகளை குக்கரால் அடித்துக்கொன்ற நபர்
|சமையல் செய்ய தாமதமானதால் ஆத்திரமடைந்த தந்தை, மகளை குக்கரால் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூரத்,
குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள சவுக் பஜார் பகுதியை சேர்ந்தவர் முகேஷ் பர்மர் (40 வயது). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகள்கள், 2 மகன்கள் இருந்தனர். இந்த நிலையில் முகேசுக்கு உடல் நிலை சரியில்லாததால் கடந்த சில நாட்களாக அவர் ஆட்டோ ஓட்ட செல்லாமல் வீட்டில் இருந்தார்.
சம்பவத்தன்று முகேசும், அவரது இளைய மகள் ஹெடாலியும் (18 வயது) மட்டும் வீட்டில் இருந்தனர். தந்தைக்கு சமைத்து கொடுக்கும்படி ஹெடாலியிடம் கூறிவிட்டு அவரது தாய் வேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
ஆனால் ஹெடாலி சமையல் செய்யாமல் வீட்டில் உள்ள மற்ற வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தார். இதனால் முகேசுக்கும், ஹெடாலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முகேஷ் சமையலறையில் இருந்த குக்கரை எடுத்து ஹெடாலியின் தலை மற்றும் முகத்தில் அடித்தார். இதில் ஹெடாலி ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இது தொடர்பாக முகேசை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.