அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா செடி வளர்த்த நபர் - அதிர்ச்சி சம்பவம்
|அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா செடி வளர்த்து அதை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பின் 10வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், 10வது மாடியில் உள்ள வீட்டில் வசித்து அந்த ராகுல் சவுதிரி என்ற இளைஞரை கைது செய்தனர்.
இதையடுத்து ராகுல் சவுதிரியின் வீட்டில் சோதனை நடத்திய போலீசார், அங்கு 80 கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வந்ததை கண்டுபிடித்தனர். மேலும், 2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். சிறப்பான உபகரணங்கள் மூலம் சூரிய ஒளியின்றி செயற்கையான ஒளி மூலம் கஞ்சா செடிகளை வளர்க்கும் முறையை ஆன்லைன் மூலம் கற்றுக்கொண்டு ராகுல் தனது வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்துள்ளார்.
பின்னர் டார்க் வெப் இணைய தளம் மூலம் கஞ்சாவை விற்பனை செய்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார். 30 கிராம் கஞ்சா 60 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 80 கஞ்சா செடிகள் பயிடப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு கஞ்சா செடியையும் பயிரிட தலா 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளார். இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா செடிகளையும் அழித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சவுதிரியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.