மெட்ரோ ரெயிலில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த வாலிபர் கைது
|பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்தவரை போலீசார் கைதுசெய்தனர்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு மெஜஸ்டிக்கில் இருந்து காலை 9 மணி அளவில் ஜே.பி.நகர் நோக்கி இளம்பெண் ஒருவர் மெட்ரோ ரெயிலில் பயணித்தார். அப்போது அந்த ரெயிலில் வந்த வாலிபர் ஒருவர் தனது செல்போனில் அந்த இளம்பெண்ணை அவருக்கு தெரியாமல் ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார். இதனை பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த 2 மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஊழியர்கள் பார்த்துள்ளனர்.
பின்னர் அவர்கள் துரிதமாக செயல்பட்டு அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து செல்போனை பறிமுதல் செய்தனர். ஜெயநகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இறங்கியதும் அந்த நபரின் செல்போனை அவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அதில், 50-க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்திருந்தார். அதாவது மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் அவர், தனது செல்போனில் பெண்களின் உடல் பாகங்களை ஆபாசமாக வீடியோ எடுத்து வந்துள்ளார்.
இதையடுத்து அந்த நபரை பாதுகாப்பு ஊழியர்கள், ஜெயநகர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரித்தபோது, அவர் பெயர் மகேஷ் என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் மெட்ரோ ரெயிலில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த மகேசுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து மெட்ரோ நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த டிசம்பர் 25-ந்தேதி நடந்த இந்த சம்பவம், தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.