நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று மத்திய அரசின் பாகுபாட்டை கண்டிப்பேன் - மம்தா பானர்ஜி
|நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்லும் மம்தா பானர்ஜி, அங்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
கொல்கத்தா,
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று, மத்திய அரசின் பாகுபாட்டை கண்டிப்பேன் என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
டெல்லி செல்லும் முன்பாக கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, "மேற்கு வங்காளத்தின் மீது காட்டப்படும் அரசியல் பாகுபாட்டிற்கு எதிராக நிதி ஆயோக் கூட்டத்தில் நான் எதிர்ப்பு தெரிவிப்பேன். பாஜகவை சேர்ந்த மந்திரிகள் மற்றும் அந்த கட்சியின் தலைவர்களின் அணுகுமுறை, வங்காளத்தை பிரிக்க நினைக்கும் வகையில் உள்ளது. பொருளாதார முற்றுகையுடன், புவியியல் தடையையும் விதிக்க விரும்புகிறார்கள். ஜார்க்கண்ட், பீகார் மற்றும் வங்காளத்தை பிரிக்க பாஜகவின் பல்வேறு தலைவர்கள் பல்வேறு அறிக்கைகளை விடுகிறார்கள். நாங்கள் அதனை கண்டிக்கிறோம். நிதி ஆயோக் கூட்டத்தில் நாங்கள் எங்கள் குரலை பதிவு செய்ய விரும்புகிறோம். எனவே, நான் அந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளேன்" என தெரிவித்தார்.
நிதி ஆயோக் கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், இன்று டெல்லி வரும் மம்தா பானர்ஜி, டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாக இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் அறிவித்துள்ள நிலையில், கூட்டத்தில் பங்கேற்கும் முடிவை மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.