வங்காளதேச இடைக்கால அரசின் தலைவருக்கு மேற்குவங்காள முதல்-மந்திரி வாழ்த்து
|வங்காளதேச இடைக்கால அரசின் தலைவராக பதவியேற்றுள்ள முகமது யூனுசுக்கு மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,
வங்காளதேசத்தில் விடுதலை போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கோர்ட்டு ரத்து செய்தது. ஆனாலும், இடஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டம் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சியின் அரசுக்கு எதிரான போராட்டமாக மாறியது.
நாடு முழுவதும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இதையடுத்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, வங்காளதேசத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இதையடுத்து, நாடாளுமன்றத்தை அந்நாட்டு அதிபர் கலைத்து உத்தரவிட்டார். அதேவேளை, அடுத்த 3 மாதங்களில் தேர்தல் நடைபெறும் என்றும் அதுவரை இடைக்கால அரசு பொறுப்பில் இருக்கும் என்றும் அந்நாட்டு ராணுவ தளபதி வேக்கர் உஸ்ஜமான் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரான முகமது யூனுஸ் இடைக்கால அரசின் தலைவராக அறிவிக்கப்பட்டார். அதன்படி, வங்காளதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான அரசு நேற்று பதவியேற்றது. முகமது யூனுசுக்கு அதிபர் முகமது சஹாபுதீன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில், வங்காளதேச இடைக்கால அரசின் தலைவராக பொறுப்பேற்றுள்ள முகமது யூனுசுக்கு மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மம்தா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பேராசிரியர் முகமது யூனுசுக்கும் அவருடன் சேர்த்து வங்காளதேச அரசில் பொறுப்பேற்றுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். வங்காளதேசத்துடனான இந்தியாவின் உறவு மேலும் வளரும் என நம்புகிறேன். வங்காளதேசம் வளர்ச்சி, அமைதி பெற வாழ்த்துகிறேன். மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள் என அனைவருக்கும் எனது வாழ்த்துகள். பிரச்சினை முடிவுக்கு வந்து விரைவில் அமைதி திரும்பும் என நம்புகிறேன். நமது அண்டை நாடு நன்றாக இருந்தால் நாமும் நன்றாக இருப்போம்' இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.