இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்க தயார் - மம்தா பானர்ஜி அறிவிப்பு
|மம்தா பானர்ஜியை கூட்டணிகட்சி தலைவராக அங்கீகரிக்குமாறு அவரது கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கொல்கத்தா,
மேற்கு வங்க முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி.) தலைவருமான மம்தா பானர்ஜி அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதால், எதிர்க்கட்சியான இந்திய கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. .
முன்னதாக பா.ஜனதாவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணியின் செயல்பாடு சரியில்லை என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், "இந்தியா கூட்டணியை நான் உருவாக்கினேன். தற்போது அதை நிர்வகிப்பது தலைமையில் இருப்பவர்களிடம்தான் உள்ளது. அவர்களால் நடத்த முடியாவிட்டால், நான் என்ன செய்ய முடியும்? அனைவரையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்றுதான் கூறுவேன்" என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
பா.ஜனதா எதிர்ப்பை தீவிரமாக கையாளும் நீங்கள் ஏன் இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்கவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், 'வாய்ப்பு கிடைத்தால், கூட்டணி சுமுகமாக இயங்குவதை உறுதி செய்வேன். இருப்பினும் மேற்கு வங்காளத்தை விட்டு வெளியே செல்ல விரும்பவில்லை. இங்கிருந்தே கூட்டணியை நடத்த முடியும்" என்று மம்தா பானர்ஜி கூறினார்
காங்கிரஸ் மற்றும் பிற கூட்டணி உறுப்பினர்கள் தங்கள் ஈகோக்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மம்தா பானர்ஜியை எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிக்குமாறு அவரது கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியதை அடுத்து அவரது கருத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.