அமித்ஷாவுக்கு எதிராக மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே உரிமை மீறல் நோட்டீஸ்
|அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசிய தொனி மிக மோசமாக இருந்தது என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
புதுடெல்லி,
அரசியல் சாசனம் மீது மாநிலங்களவையில் நேற்று முன்தினம் நடந்த சிறப்பு விவாதத்தின்போது, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்று பேசினார். அப்போது அம்பேத்கர் பற்றி அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சியினர் அவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால், நேற்று இரு அவைகளும் முடங்கின.
இந்த நிலையில், இன்று காலை 11 மணியளவில் இரு அவைகளும் தொடங்கின. அப்போது இந்த விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சிகள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இதனால், மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுகிறது என அதன் தலைவர் ஓம் பிர்லா கூறினார். இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவையும் முடங்கியது. இதனால், அவையை அதன் தலைவர் ஜெகதீப் தன்கர் மதியம் 2 மணி வரை ஒத்திவைத்து அறிவித்து உள்ளார். இந்த விவகாரம் எதிரொலியாக, 2-வது நாளாக அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.
இந்த நிலையில் அமித்ஷாவுக்கு எதிராக மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசிய தொனி நையாண்டித்தனமாக, மிக மோசமாக இருந்தது என்று கூறியுள்ள கார்கே, மாநிலங்களவை விதி 188-ன் கீழ் அமித்ஷா மீது ஏன் உரிமை மீறல் பிரச்சினையை கொண்டு வரக்கூடாது என கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.