ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா: மராட்டியத்தின் அடுத்த முதல்-மந்திரி யார்..?
|மராட்டிய சட்டசபைத்தேர்தலில் மகாயுதி கூட்டணி 230 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது.
மும்பை,
288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபையில், ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில், மகாயுதி கூட்டணி 230 இடங்களை கைப்பற்றியது. இதில் பா.ஜனதா மட்டும் 132 தொகுதிகளிலும், சிவசேனா 57, தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களிலும் வெற்றியை பதிவு செய்தன.
மகாவிகாஸ் அகாடி கூட்டணி ஒட்டுமொத்தமாக 46 இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்ததால், அந்த கூட்டணியில் உள்ள 3 கட்சிகளில் ஒன்றுகூட பிரதான எதிர்க்கட்சி வரிசையில் அமர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. தேர்தல் வெற்றியை தொடர்ந்து மராட்டிய பா.ஜனதாவின் முகமாக உள்ள தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரி பதவி ஏற்பார் என்றும், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒரு துணை முதல்-மந்திரி பதவி வழங்க பா.ஜனதா முடிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி பதவியில் நீடிக்க வேண்டும் என்று சிவசேனா கட்சியினர் விரும்புகின்றனர்.
இந்த பரபரப்புக்கு மத்தியில் நேற்று துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் டெல்லி விரைந்தார். அவர் புதிய அரசு அமைப்பதில் ஏற்பட்டு உள்ள தாமதம் தொடர்பாகவும், அதற்கான தீர்வு குறித்தும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே மராட்டிய சட்டசபையின் பதவி காலம் இன்று நிறைவு பெறுகிறது.
இந்நிலையில் மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரிகள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் உள்ளிடோர் மும்பையில் உள்ள ராஜ்பவனில் அம்மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்தனர். அப்போது ஆட்சி அமைக்க அவர்கள் உரிமை கோரியதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் மராட்டிய மாநில முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை ஏக்நாத் ஷிண்டே, கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். அதனை கவர்னர் பெற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து மகாயுதி கூட்டணியின் சார்பில் மராட்டியத்தின் அடுத்த முதல்-மந்திரி யார் என்று கேள்வி எழுந்துள்ளது.
முன்னதாக மகாயுதி கூட்டணியில் முதல்-மந்திரி பதவி தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்பட்ட நிலையில், ஆட்சி அமைக்க உரிமை கோர கவர்னருடன் பட்னாவிஸ் சந்தித்ததாக தகவல் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் புதிய முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, தங்கள் தரப்பு முடிவை இன்னும் தெளிவுபடுத்தவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.