< Back
தேசிய செய்திகள்
மராட்டிய சட்டசபை தேர்தல்: 2 கூட்டணிகளிலும் தொகுதி பங்கீட்டில் கடும் இழுபறி
தேசிய செய்திகள்

மராட்டிய சட்டசபை தேர்தல்: 2 கூட்டணிகளிலும் தொகுதி பங்கீட்டில் கடும் இழுபறி

தினத்தந்தி
|
29 Oct 2024 5:16 AM IST

மராட்டிய சட்டமன்ற தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும்.

மும்பை,

வரும் நவம்பர் 20-ம் தேதி மராட்டிய சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஆகிய கட்சிகளின் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவ சேனா (உத்தவ் தாக்கரே), தேசிய வாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

2 கூட்டணியிலும் 3 பெரிய கட்சிகள் இருப்பதால் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் கடும் இழுபறி நிலவி வருகிறது. 2 கூட்டணிகளும் நேற்று இரவு வரை முழுமையான வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. மகாயுதி கூட்டணியை பொறுத்தவரை இதுவரை 260 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பா.ஜனதா 146 தொகுதிகளுக்கும், சிவசேனா 65 தொகுதிகளுக்கும், தேசியவாத காங்கிரஸ் 49 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ் 99 தொகுதிகளுக்கும், உத்தவ் தாக்கரே சிவசேனா 84 இடங்களுக்கும், தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) 83 தொகுதிகளுக்கும் இதுவரை வேட்பாளர்களை அறிவித்து உள்ளன.

வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ஆகும். இதனால் இரு கூட்டணியிலும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய நேற்று இரவு விடிய, விடிய கட்சி தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். தீர்வு காணப்படாத தொகுதிகளை ஒன்றுக்கும் மேற்பட்ட கட்சிகள் உரிமை கோருவதால், இழுபறி நீடித்து வருகிறது. வேட்பு மனு தாக்கல் முடிவடைய இன்னும் சில மணி நேரங்களே எஞ்சியிருக்கும் நிலையில், இரு கூட்டணிகளிலும் தொகுதி பங்கீட்டு நிறைவடையாதது மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்