< Back
தேசிய செய்திகள்
மராட்டியத்தில் பெண்களுக்கான மாதம் ரூ.1,500 திட்டம் துவக்கம்
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் பெண்களுக்கான மாதம் ரூ.1,500 திட்டம் துவக்கம்

தினத்தந்தி
|
18 Aug 2024 10:54 AM IST

மக்களாகிய நீங்கள் எங்கள் கூட்டணிக்கு ஆதரவு அளித்தால், இந்த தொகை மேலும் உயர்த்தப்படும் என்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறினார்.

மும்பை,

மராட்டியத்தில் நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் சிவசேனா, பா.ஜனதா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்தது.

இந்த நிலையில் 288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு வருகிற அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க ஆளும் கூட்டணி முனைப்பு காட்டி வருகிறது.

இந்த நிலையில் 2024-25-ம் ஆண்டுக்கான கூடுதல் பட்ஜெட்டை துணை முதல்-மந்திரி அஜித்பவார் கடந்த மாதம் சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில் பெண்களுக்கான மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை வழங்கும் 'லாட்கி பகின்'(அன்பு சகோதரி) திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தின் பலனை பெற விண்ணப்பிக்கும் பெண்களுக்கு குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.2½ லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு 21 முதல் 65 வரை என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் ரக்சா பந்தனை முன்னிட்டு நேற்றைய தினம் தொடங்கி வைக்கப்படும் என அரசு அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் தகுதிவாய்ந்த பெண்களை தேர்வு செய்யும் பணி மிக குறுகிய காலத்தில் நடைபெற்று திட்டமிட்டப்படி நேற்று திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதற்கான விழா புனே பலேவாடி பகுதியில் உள்ள சிவ் சத்ரபதி விளையாட்டு வளாகத்தில் நடந்தது. பெண்கள் அதிக அளவில் கலந்துகொண்ட இந்த விழாவில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்-மந்திரிகள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித்பவார் ஆகியோர் இந்த திட்டத்தை கூட்டாக தொடங்கி வைத்தனர்.

இதன் மூலம் பெண்களின் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய 2 மாதங்களுக்குரிய தவணை சேர்த்து வழங்கப்பட்டதால் பெண்களின் வங்கி கணக்கில் ரூ.3 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. இதுபற்றிய குறுந்தகவல் செல்போனுக்கு வந்ததும், அதைப்பார்த்து பெண்கள் மகிழ்ச்சி அடைந்து ஆரவாரம் செய்தனர். மேலும் பெண்கள் தங்கள் மகிழ்ச்சியை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துகொண்டதை காண முடிந்தது.

முன்னதாக திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய ஏக்நாத் ஷிண்டே, மக்களாகிய நீங்கள் எங்கள் கூட்டணிக்கு ஆதரவு அளித்தால், இந்த தொகை 2,000 அல்லது 3,000 ஆக உயர்த்தப்படும். இந்த திட்டத்தால் பெண்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் என்றார். சட்டசபை தேர்தல் நெருங்குவதால், ஓட்டு வங்கியை குறிவைத்தே இந்த திட்டத்தை ஆளும் கூட்டணி அறிவித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

மேலும் செய்திகள்