மராட்டியம்: வாகன சோதனையில் ரூ.5.55 கோடி பணம் பறிமுதல்
|மராட்டிய சட்டசபை தேர்தலில் கடும் போட்டி நிலவி வருவதால், பல்வேறு கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மும்பை,
மராட்டிய சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 20ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) ஒரு அணியாகவும் போட்டியிடுகின்றன. இதனால் அங்கு கடும் போட்டி நிலவி வருவதால், பல்வேறு கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அமலாக்கத்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கணக்கில் காட்டப்படாத பணம், மதுபானம் மற்றும் பிற தூண்டுதல்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நிலையான கண்காணிப்பு குழுக்கள், பறக்கும் படைகள் மற்றும் பிற கண்காணிப்பு பிரிவுகள் வாகன சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்நிலையில், மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் ரூரல் சட்டசபை தொகுதியில் தேர்தல் அதிகாரிகள் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்த சோதனையின் போது ஒரு வாகனத்தில் இருந்து ரூ.5.55 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி விஸ்வாஸ் குஜார் தெரிவித்துள்ளார். மேலும், அனுமதிக்கப்பட்ட ரூ.10 லட்சத்தை தாண்டியதால், இந்த விவகாரம் மேலும் விசாரணைக்காக வருமான வரித்துறைக்கு அனுப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.