மராட்டியத்தில் நாளை பதவி ஏற்கிறது புதிய அரசு: முதல்-மந்திரி யார்..?
|மராட்டிய மாநிலத்திற்கு புதிய முதல்-மந்திரி இன்று தேர்வு செய்யப்படுகிறார்.
மும்பை,
மராட்டியத்தில் பா.ஜனதா தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி சட்டசபை தேர்தலில் அமோக வெற்றியை கண்டபோதிலும், ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வருகிறது. கூட்டணியில் அதிக இடங்களில் பா.ஜனதா வெற்றி பெற்றதால் முதல்-மந்திரி பதவி ஏற்க பா.ஜனதா விரும்புகிறது.
தே நேரத்தில் முதல்-மந்திரி ஷிண்டேயின் முகத்தை முன்வைத்தே தேர்தலை சந்தித்ததாகவும், இதனால் அவர் முதல்-மந்திரி பதவியில் நீடிக்க வேண்டும் என்று சிவசேனாவினர் விரும்பினர். ஆனால் இதனை எற்க பா.ஜ.க. மறுத்தது. அதன்பிறகு நடத்திய பேச்சுவார்த்தையில் முதல்-மந்திரி பதவியை பா.ஜனதாவுக்கு வழங்க தலைவர்கள் ஒப்புக்கொண்டதாக சொல்லப்படுகிறது.
முதல்-மந்திரி பதவியை தங்களுக்கு தராவிட்டால், உள்துறை, நிதி இலாகாக்கள் மற்றும் சபாநாயகர் பதவியை தங்களது கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி உள்ளது. ஒருவேளை அப்படி தராவிட்டால் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்க சிவசேனா விரும்புவதாகவும் பா.ஜனதா தலைவர்களிடம் ஷிண்டே கூறியுள்ளார்.
அதிகார பகிர்வு விஷயத்தில் பா.ஜனதா மீதான அதிருப்தியால் ஷிண்டே மாநில தலைநகரை விட்டு சொந்த கிராமத்துக்கு சென்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் என்று பா.ஜனதா அறிவித்திருந்தது.
இந்நிலையில் பதவி ஏற்பு விழாவுக்கு முன்னதாக இன்று (புதன்கிழமை) பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது. இதில் பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவர் தேர்வு செய்யப்படுகிறார். அவர் மராட்டியத்தின் புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ளார். இந்த வாய்ப்பு தேவேந்திர பட்னாவிஸ்-க்கு கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.
விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அவரது முன்னிலையில் கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவி ஏற்பு செய்து வைக்கிறார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநில முதல்-மந்திரிகள், துணை முதல்-மந்திரிகள், பா.ஜனதா முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.