மராட்டிய மந்திரிசபை நாளை விரிவாக்கம்
|வருகிற 16-ந்தேதி மராட்டிய சட்டசபையில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.
மும்பை,
மராட்டிய சட்டசபை தேர்தலில் மகாயுதி கூட்டணி அமோக வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியை தொடர்ந்து மும்பையில் கடந்த 5-ந்தேதி நடைபெற்ற பிரமாண்ட விழாவில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக பதவியேற்றார். சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் ஆகியோர் துணை முதல்-மந்திரிகளாக பதவியேற்றனர்.
அவர்கள் மூவரையும் தவிர வேறு மந்திரிகள் பதவி ஏற்கவில்லை. மந்திரிசபை விரிவாக்கத்தில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. கூட்டணி கட்சிகள் இடையே இலாகா பகிர்வில் உள்ள பிரச்சினை தான், இந்த தாமதத்திற்கு காரணம் ஆகும். இந்த நிலையில் மாநிலத்தின் 2-வது தலைநகரமான நாக்பூரில் வருகிற 16-ந்தேதி மராட்டிய சட்டசபையில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இதற்கு முன்பு மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறும் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியிருந்தார்.
அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) புதிய மந்திரிகள் பதவியேற்பு விழா நடைபெறும் என்று பா.ஜனதா மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார். நாக்பூரில் நடைபெறும் இந்த விழாவில் சுமார் 30 முதல் 32 மந்திரிகள் பதவி ஏற்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். புதிய மந்திரிகள் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ள வசதியாக மந்திரிசபை விரிவாக்கத்தை மும்பைக்கு பதில் நாக்பூரிலேயே நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.