மராட்டிய மாநிலம்: சட்டவிரோதமாக ஆயுத உரிமம் பெற்று காவல் பணிகளில் ஈடுபட்ட 9 பேர் கைது
|சட்டவிரோதமாக ஆயுத உரிமம் பெற்று காவல் பணிகளில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருப்பவர்கள் தொடர்பாக அகல்யாநகர் காவல் நிலைய போலீசார் புனே, சோனாய், ஷிரிங்கோண்டா உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த 9 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் 9 பேரும் சட்டவிரோதமாக ஆயுத உரிமம் பெற்று புனே, அகல்யாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வங்கிகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் காவல் பணிகளில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் இருந்து 12 ரைபிள்கள், போலி துப்பாக்கி உரிமங்கள் மற்றும் துப்பாக்கி குண்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமிதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிலர் 2015-ம் ஆண்டில் இருந்தே போலி ஆயுத உரிமம் மூலமாக துப்பாக்கி பெற்று காவல் பணிகளில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பயங்கரவாத நோக்கம் எதுவும் இல்லை என்று உறுதி செய்துள்ள போலீசார், தொடர்ந்து இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.