< Back
தேசிய செய்திகள்
மகா கும்பமேளா 2025; தூய்மையாகவும், பிரம்மாண்டமாகவும் நடத்தப்படும் - யோகி ஆதித்யநாத்
தேசிய செய்திகள்

மகா கும்பமேளா 2025; தூய்மையாகவும், பிரம்மாண்டமாகவும் நடத்தப்படும் - யோகி ஆதித்யநாத்

தினத்தந்தி
|
26 Nov 2024 6:33 PM IST

மகா கும்பமேளா 2025 உலக அளவில் சனாதன தர்மத்திற்கு புதிய அடையாளத்தை அளிக்கும் என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

லக்னோ,

உலகின் மிகப்பெரிய ஆன்மீக, கலாசார மற்றும் மத நிகழ்வுகளில் ஒன்றாக 'மகா கும்பமேளா' விளங்குகிறது. இந்நிலையில், 'மகா கும்பமேளா 2025' வரும் ஜனவரி 13-ந்தேதி முதல் பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக இந்தியா முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், 'மகா கும்பமேளா 2025' தூய்மையாகவும், பிரம்மாண்டமாகவும் நடத்தப்படும் என உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-

"மகா கும்பமேளா தூய்மையாகவும், பிரம்மாண்டமான முறையிலும் நடத்தப்படும். அது மட்டுமின்றி பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பத்தின் சங்கமமாகவும் இந்த நிகழ்வு இருக்கும். முந்தைய காலங்களில் மகா கும்பமேளா என்பது அழுக்கு, நெரிசல் மற்றும் குழப்பத்தோடு தொடர்புபடுத்தப்பட்டது. கும்பமேளாவை நடத்தும் பொறுப்பு பெரும்பாலும் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை மதிக்காதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால் பாரம்பரியத்தின் மீதான மரியாதை மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் உத்வேகத்துடன் கடந்த 2019-ல் நடத்தப்பட்ட பிரயாக்ராஜ் கும்பமேளாவிற்கு யுனெஸ்கோவின் அங்கீகாரம் கிடைத்தது. அந்த நிகழ்வில் சுமார் 24 கோடி பக்தர்கள் கலந்து கொண்டனர். 2025 மகா கும்பமேளாவில் சுமார் 35 முதல் 45 கோடி பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகா கும்பமேளாவிற்கான ஏற்பாடுகளை மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பிரயாக்ராஜ் நகருக்கு சாலை, ரெயில் மற்றும் விமானம் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் வந்து சேர்வதற்கான போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சாலைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் 14 மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

கங்கை நதியின் தூய்மையை மீட்கும் முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கங்கையில் இனி கழிவுநீர் கலக்காது. மகா கும்பமேளாவின்போது தூய்மையான கங்கை நதியில் பக்தர்கள் நீராடலாம். மகா கும்பமேளாவை முன்னிட்டு பக்தர்களின் தேவைக்காக 1.5 லட்சம் கழிப்பறைகள் கட்டப்படுகின்றன. சுமார் 1.6 லட்சம் குடில்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சனாதன தர்மத்தின் பாரம்பரியம், வளர்ச்சி மற்றும் கலாசாரத்தை வெளிப்படுத்தும் ஒரு புதிய பிரச்சாரமாக பிரயாக்ராஜ் 'மகா கும்பமேளா 2025' இருக்கும். இது உலக அளவில் சனாதன தர்மத்திற்கு புதிய அடையாளத்தை அளிக்கும்."

இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்