மகா கும்பமேளா 2025: பிரயாக்ராஜ் நகரில் முழுவீச்சில் நடைபெறும் பணிகள்
|உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வுகளில் ஒன்றான மகா கும்பமேளாவுக்காக பிரயாக்ராஜ் முழுவதும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
பிரயாக்ராஜ்:
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரில், கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகிய மூன்று நதிகள் ஒன்றாக சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் அமைந்துள்ளது. இங்கு, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்கள் புனித நீராடும் நிகழ்வு, 'மகா கும்பமேளா' என அழைக்கப்படுகிறது.
அவ்வகையில் வரும் 13-ம் தேதி முதல் பிப்ரவரி 26-ம் தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக இந்தியா முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வுகளில் ஒன்றான மகா கும்பமேளாவுக்காக பிரயாக்ராஜ் முழுவதும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
நதிகள் மற்றும் பல்வேறு நீா்நிலைகள் தூய்மை செய்யப்படுகின்றன. சாலைகளை விரிவுபடுத்துதல், மலைப்பாதைகளை சமன் செய்தல், மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்துதல், பக்தா்கள் தங்குவதற்கு தேவையான கூடாரங்கள், கழிப்பறைகள், குடிநீர் இணைப்புகள், சுகாதார வசதிகள், செய்யப்படுகின்றன. ஆங்காங்கே உணவகங்கள் அமைக்கப்படுகின்றன. பக்தர்கள் புனித நீராடும் படித்துறை பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. பல கோடி மக்கள் வருகை தருவார்கள் என்பதால், கூடுதலாக படித்துறைகளும், நீராடும் துறைகளும் கட்டப்படுகின்றன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிரயாக்ராஜ் நகருக்கு வாகன வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. மகா கும்பமேளாவை முன்னிட்டு பிரயாக்ராஜ் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.