மத்திய பிரதேசம்: 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - சிறுவன் உள்பட இருவர் கைது
|சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் உள்பட 2 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
போபால்,
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒரு மைனர் சிறுவன் மற்றும் 19 வயது இளைஞர் ஆகிய 2 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் சிறுமியின் ஆண் நண்பருக்கு தெரிந்தவர்கள் என காவல்துறை டி.சி.பி. வினோத் குமார் மீனா தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் அவரது ஆண் நண்பருக்கும் இடையே பிரச்சினை இருந்துள்ளது. இந்நிலையில், பிரச்சினையை சமரசம் செய்து வைப்பதாக கூறி குற்றவாளிகள் இருவரும் சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்" என்று கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி 19 வயது இளைஞர் மற்றும் ஒரு மைனர் சிறுவனை கைது செய்துள்ளனர். மேலும் இந்த செயலை அவர்கள் வீடியோ பதிவு செய்ததாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி போலீசாரிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.