< Back
தேசிய செய்திகள்
ஆன்லைன் முதலீட்டில் பணம் இழப்பு - கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு
தேசிய செய்திகள்

ஆன்லைன் முதலீட்டில் பணம் இழப்பு - கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு

தினத்தந்தி
|
18 Jun 2024 4:54 AM IST

மாணவி முதலீடு செய்த பணம் அவருக்கு திரும்ப கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் கோலார் தங்கவயலை சேர்ந்தவர் பாவனி(வயது 19). இவர், பெங்களூருவில் உள்ள மகாராணி கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வந்தார். கல்லூரிக்கு சொந்தமான விடுதியில் தங்கி அவர் கல்லூரிக்கு சென்று வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் விடுதி அறையில் மாணவி பாவனி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்து சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மாணவி பாவனியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். மேலும் அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதமும் போலீசாருக்கு கிடைத்தது. மாணவி பாவனி எளிதில் பணம் சம்பாதிக்க ஆன்லைன் நிறுவனம் ஒன்றில் ரூ.15 ஆயிரத்தை முதலீடு செய்தார். அந்த பணம் அவருக்கு திரும்ப கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டு இருந்தது.

இதற்காக ரூ.10 ஆயிரத்தை சக தோழிகளிடம் இருந்து அவர் கடன் வாங்கி இருந்தார். மீதி ரூ.5 ஆயிரம் கிடைக்காமல் இருந்துள்ளது. இந்த பணப்பிரச்சினை காரணமாக மனம் உடைந்த மாணவி பாவனி தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து சேஷாத்திரிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்