நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு மீது விவாதம்.. நாளை தொடங்குகிறது
|எதிர்க்கட்சி சார்பில் மக்களவையில் ராகுல் காந்தியும், மாநிலங்களவையில் கார்கேவும் விவாதத்தை தொடங்குவார்கள் என தெரிகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 75-வது ஆண்டு விழாவை கொண்டாடும் நிலையில், அரசியலமைப்பு தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் நாளையும் நாளை மறுதினமும் (வெள்ளி, சனி) விவாதம் நடத்தப்படுகிறது.
ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் விவாதத்தை தொடங்கி வைப்பார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மாநிலங்களவையில் இதேபோன்ற விவாதத்தை தொடங்குவார் என தெரிகிறது. மாநிலங்களவையில் 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் விவாதம் நடைபெறும்.
அரசியலமைப்பு மீதான விவாதத்தின் நிறைவில் பிரதமர் மோடி பதிலுரை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவாதத்திற்கு முன்னதாக, பிரதமர் மோடி முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, உள்துறை மந்திரி அமித் ஷா மற்றும் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் நட்டா, பியூஷ் கோயல், கிரண் ரிஜிஜு உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த அமைச்சர்களுடன அமித் ஷா தனியாக ஆலோசனை நடத்தினார்.
அரசியலமைப்பு மீதான விவாதத்தில் முன்வைக்கப்படும் அம்சங்கள் குறித்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்திலும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.
எதிர்க்கட்சி சார்பில் மக்களவையில் ராகுல் காந்தியும், மாநிலங்களவையில் கார்கேவும் விவாதத்தை தொடங்குவார்கள் என தெரிகிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 20-ம் தேதி முடிவடைகிறது.