தொடர் அமளி காரணமாக மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
|எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், அந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை.
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதானி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சூழலில் அதானி விவகாரம் மற்றும் உத்தர பிரதேசத்தில் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்ற மக்களவையில் அமலில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து மாநிலங்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மீண்டும் தொடங்கிய மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக தலைவர் ஜெகதாம்பிகா பால், எதிர்க்கட்சிகளை அமைதிப்படுத்த முயன்றார், மேலும் மசோதா மீதான விவாதத்திற்கு பதில் அளிக்குமாறு ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவிடம் கேட்டுக்கொண்டார். ஆனால், எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மக்களவை செயல்பட முடியவில்லை. அமளி தொடர்ந்ததால், சபையை இன்று நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.
முன்னதாக எதிர்க்கட்சிகள் வெளிநாட்டு நிதியுதவி மூலம் அரசை சிதைக்க முயற்சிப்பதாக பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டி இருந்தார். அமெரிக்க அரசாங்கம் மற்றும் பில்லியனர் ஜார்ஜ் சோரோஸ் அறக்கட்டளையால் நிதியளிக்கப்பட்ட OCCRP- மூலம் இந்தியாவை சீர்குலைக்க வேலை செய்வதாக அவர் குற்றம் சாட்டி இருந்தார். மேலும் ஜார்ஜ் சோரோஸ் மற்றும் OCCRP உட்பட பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையிலான உறவு குறித்து துபே கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.