< Back
தேசிய செய்திகள்
வேலை கிடைக்காததால் திட்டிய காதலி; லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்த இளைஞர் தற்கொலை
தேசிய செய்திகள்

வேலை கிடைக்காததால் திட்டிய காதலி; லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்த இளைஞர் தற்கொலை

தினத்தந்தி
|
14 Dec 2024 6:00 PM IST

வேலை கிடைக்காதது குறித்து காதலி திட்டியதால் லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

புதுடெல்லி,

உத்தர பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தை சேர்ந்த மயங்க் சாந்தல்(27) என்ற இளைஞர், டெல்லி அருகே நொய்டாவில் தனது காதலியுடன் லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்தார். இவர்கள் இருவரும் சிறுவயதில் இருந்தே ஒன்றாக படித்து வந்துள்ளனர். இந்நிலையில், மயங்கின் காதலிக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்த நிலையில், மயங்க் வேலை கிடைக்காமல் இருந்து வந்துள்ளார்.

இதனை அவரது காதலி அடிக்கடி சொல்லி காண்பித்து திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மயங்க், தனது அறையில் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த காதலி, தூக்கில் தொங்கிய மயங்கின் உடலை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மயங்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது அறையை சோதனை செய்தபோது அங்கு ஒரு கடிதம் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த கடிதத்தை மயங்க் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதி வைத்துள்ளார்.

அதில், வேலை கிடைக்காமல் நாள் முழுவதும் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, சாப்பிட்டுக் கொண்டு நேரத்தை கழிப்பதாக தனது காதலி தன்னை திட்டியது தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியதாக மயங்க் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம், தனது இந்த முடிவிற்காக யாரையும் அவர் குற்றம்சாட்டவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்