"ஜோ பைடனை போல் பிரதமர் மோடிக்கும் இந்த பிரச்சினை இருக்கு..." - விமர்சித்த ராகுல் காந்தி
|மராட்டிய தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடியை ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்தார்.
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் வரும் 20-ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளநிலையில், அமராவதியில் நடைபெற்ற பேரணியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், "மோடியின் உரையை கேட்டதாக என் சகோதரி என்னிடம் கூறினார். அந்த உரையில், நாம் எதைச் சொன்னாலும், மோடியும் அதையே திரும்பி சொல்வதாக அவர் கூறினார். எனக்கு தெரியாது. ஒருவேளை அவர் நினைவாற்றலை இழந்திருக்கலாம். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி (ஜோ பைடன்) எல்லாவற்றையும் மறந்துவிடுவார். பின்னால், இருந்து அவருக்கு நினைவுபடுத்த வேண்டியிருந்தது. உக்ரைன் அதிபர் வந்ததற்கு, ரஷிய அதிபர் புதின் வந்திருப்பதாக அவர் கூறினார். அவர் நினைவாற்றலை இழந்திருந்தார். அதேபோல நமது பிரதமரும் நினைவாற்றலை இழந்து நிற்கிறார்.
கடந்த ஓராண்டாக எனது உரைகளில் அரசியல் சாசனத்தை பா.ஜ.க. தாக்கி வருகிறது என்று கூறி வருகிறேன். ஆனால், அரசியல் சாசனத்தை காங்கிரஸ் தாக்குகிறது என்று பிரதமர் மோடி கூறுகிறார். மக்கள் கோபமடைந்து வருவதை அறிந்த அவர், இப்போது அரசியல் சாசனத்தை தாக்குகிறேன் என்று கூறுகிறார். 50 சதவீத இடஒதுக்கீட்டு வரம்பை காங்கிரசும் இந்தியா கூட்டணியும் ரத்து செய்யும் என்றும் மக்களவையில் அவரிடம் தெரிவித்தேன். உங்கள் நினைவாற்றலை இழந்துவிட்டீர்கள் என்று நான் அவரிடம் சொன்னேன். ஆனால், அவர் இன்னும் ராகுல் காந்தி இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர் என்று கூறி வருகிறார்.
நான் மோடியிடம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தச் சொன்னேன். அதற்கு அவர், அடுத்து நடந்த கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு நான் எதிரானவன் என்று சொல்கிறார்" என்று ராகுல் காந்தி கூறினார். தொடர்ந்து தாராவி திட்டத்தால் 2022ல் மராட்டிய அரசை பா.ஜ.க. கவிழ்த்ததாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.