அதானி நிறுவன பங்குகள் வீழ்ச்சி: ரூ.12 ஆயிரம் கோடி இழந்த எல்.ஐ.சி.
|எல்.ஐ.சி. நிறுவனத்துக்கு ஒரே நாளில் ரூ.12 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை,
கவுதம் அதானி மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டதன் எதிரொலியாக அதானி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. இதன்படி அதானி எண்டர்பிரைசஸ் 19 சதவீதமும், அதானி போர்ட்ஸ் 15 சதவீதமும் சரிவை சந்தித்துள்ளன.
அதானி துறைமுகம், அதானி என்டர்பிரைசஸ், அதானி எனர்ஜி, அதானி பவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு தலா 10 சதவீத்திற்கு மேல் சரிவை சந்தித்து வருகின்றன. ஒட்டுமொத்தமாக, அதானி குழும நிறுவனங்கள் இன்று ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான சரிவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அதானி குழுமத்தின் 7 நிறுவன பங்குகளில் எல்.ஐ.சி. முதலீடு செய்துள்ள நிலையில், இன்று ஒரே நாளில் எல்.ஐ.சி.க்கு ரூ.12 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே அதானி குழுமத்துக்கு கடன் அளித்த, ஐ.சி.ஐ.சி.ஐ., ஆக்சிஸ், இண்டஸ்இண்ட், ஐ.டி.எப்.சி. உள்ளிட்ட வங்கிகளின் பங்கு விலையும் கடும் சரிவை சந்தித்து வருகின்றன.
இந்த சூழலில் அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கள் அடிப்படை ஆதாரமற்றது என்று அதானி குழுமம் விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்களை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும் அதானி குழுமம் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.