பிரியங்கா உங்கள் மகளாகவும், சகோதரியாகவும் செயல்படுவார்: ராகுல் காந்தி
|வயநாடு இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி,
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் போட்டியிட்ட மற்றொரு தொகுதியான உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் வெற்றி பெற்றார். இதையடுத்து, வயநாட்டின் எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதி காலியானது. இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையம், வயநாடு தொகுதிக்கு நவம்பர் 13ம் தேதி (இன்று) இடைத்தேர்தல் அறிவித்தது
இதன்படி வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது . இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்யன் மொகெரி, பா.ஜனதா சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுகின்றனர். இன்று காலை தொடங்கி வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வயநாடு வாக்காளர்களை தனது சகோதரி பிரியங்கா காந்திக்கு ஆதரவளிக்குமாறு ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
"வயநாட்டில் உள்ள எனது குடும்பத்தினரிடம் நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இந்த தேர்தல் மூலம் நாடாளுமன்றத்தில் உங்கள் குரலாக ஒலிக்க எனது சகோதரி பிரியங்கா காந்தி தயாராக இருக்கிறார். அவர் ஒரு பிரதிநிதி என்பதை தாண்டி, உங்கள் சகோதரியாகவும், உங்கள் மகளாகவும், உங்கள் வழக்கறிஞராகவும் இருப்பார். வயநாட்டுக்காக முழுத் திறனையும் வெளிப்படுத்துவார் என்று நான் நம்புகிறேன். அனைவரையும் வீட்டை விட்டு வெளியே வந்து வாக்களித்து அவருக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நாம் இணைந்து ஒரு அமோக வெற்றியை உறுதி செய்வோம்" என்று பதிவிட்டுள்ளார்.