மராட்டியத்தை கொள்ளை அடிக்கும் சக்திகளை தோற்கடிப்போம்: சஞ்சய் ராவத்
|துரோகிகளுக்கு ஆட்சியை கொடுத்ததே பா.ஜனதா செய்த மிக மோசமான செயல் என்று சஞ்சய் ராவத் எம்.பி. கூறினார்.
மும்பை,
உத்தவ் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
மகா விகாஸ் அகாடி கூட்டணி 210 இடங்களில் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். நாங்கள் ஒன்றாக தேர்தலில் போட்டியிடுவதை இலக்காக கொண்டு செயல்படுகிறோம். மராட்டியத்தை கொள்ளை அடிக்கும் சக்திகளை நாங்கள் தோற்கடிப்போம்.
பா.ஜனதா எங்கள் கட்சி குறித்து தவறான செய்திகளை பரப்பி வருகிறது. அதை யார் செய்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியும். சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக மாநிலத்தை கொள்ளையடித்து வரும் துரோகிகளுக்கு ஆட்சியை கொடுத்ததே பா.ஜனதா செய்த மிக மோசமான செயல்.
எங்களுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையேதான் அதிகமான மோதல்கள் உள்ளது. எனவே நல்லுறவு என்பது 2 கட்சிகளுக்குள் ஏற்பட சாத்தியமில்லை. அரசியலமைப்பு சட்டத்தை குறைத்து மதிப்பிடும், மராட்டிய பெருமையை அவமதிக்க முயலும் பா.ஜனதாவுக்கு நாங்கள் உதவ மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.