< Back
தேசிய செய்திகள்
லட்டு விவகாரம்:  அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க நுகர்வோர் விவகார துறை தாமதிப்பது ஏன்...? வெளியான தகவல்
தேசிய செய்திகள்

லட்டு விவகாரம்: அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க நுகர்வோர் விவகார துறை தாமதிப்பது ஏன்...? வெளியான தகவல்

தினத்தந்தி
|
23 Sept 2024 6:48 PM IST

மத்திய நுகர்வோர் விவகார துறையின் செயலாளர் நிதி காரே, பிரதமர் மோடி அரசின் 100 நாள் சாதனைகள் தொடர்புடைய நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் நெய்க்கு பதிலாக விலங்கின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டது என ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு சில நாட்களுக்கு முன்பு குற்றச்சாட்டை கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். லட்டுக்கு பயன்படுத்தப்படும் உபபொருட்களில் தரமற்ற பொருட்கள் மற்றும் விலங்குகளின் கொழுப்பு ஆகியவை பயன்படுத்தப்பட்டு உள்ளன என்பது தெரிய வந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

எனினும், இந்த குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் முதல்-மந்திரியான ஜெகன் மோகன் ரெட்டி மறுப்பு தெரிவித்து உள்ளார். இந்த விவகாரத்தில், பிரதமர் மோடிக்கு ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி உள்ளார்.

அந்த கடிதத்தில், அரசியல் உள்நோக்கம் கொண்ட சந்திரபாபுவின் அறிக்கைகள் பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளதுடன், திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்தின் புனித தன்மையை களங்கப்படுத்தி உள்ளது என தெரிவித்து உள்ளார். இந்த சூழலில், கோவிலுக்கான லட்டு பிரசாதத்திற்கான நெய்யில் விலங்கின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டது தொடர்புடைய குற்றச்சாட்டுகளை பற்றி விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அமைத்துள்ளார்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அரசாட்சியின்போது முறைகேடுகள் நடந்துள்ளன என கூறியதுடன், இந்த செயல்முறையை தூய்மைப்படுத்த போகிறேன் என்றும் கூறியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் திருமலையில் புனிதமற்ற பல விசயங்கள் நடந்துள்ளன என்றும் கூறி மற்றொரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

திருப்பதி லட்டு விவகாரத்தில், நுகர்வோர் விவகார துறை அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்காத நிலை காணப்படுகிறது. இந்நிலையில், மத்திய நுகர்வோர் விவகார துறையின் செயலாளர் நிதி காரே, 3-வது முறையாக பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடியின், அரசின் 100 நாள் சாதனைகள் தொடர்புடைய நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார்.

அப்போது அவர் இந்த விவகாரம் பற்றி கூறும்போது, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்திடம் (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.) இருந்து அறிக்கை வர வேண்டும். இதன்பின்னரே, சந்தையில் உள்ள நெய்யின் தரம் பற்றி கண்காணிப்பதற்கான கூடுதல் நடவடிக்கைகளை எடுப்பது பற்றி எங்களுடைய துறையானது பரிசீலனை மேற்கொள்ளும்.

அதனால், அதன் அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என்றார். உணவு பாதுகாப்பானது எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.யின் வரம்புக்குள் வருகிறது என கூறிய அவர், நடவடிக்கை எடுப்பதற்கு முன் நாம் அனைவரும் அதன் அறிக்கைக்காக காத்திருக்க வேண்டும் என்றார்.

எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.யின் அறிக்கைக்கு பின்னர் தேவைப்பட்டால், கூடுதல் நடவடிக்கையை எடுப்போம். தேசிய நுகர்வோர் உதவி மையத்திற்கு, நுகர்வோர்களிடம் இருந்து புகார்களும் வந்துள்ளன என்றார். உணவு தொடர்புடைய புகார்கள் தேசிய நுகர்வோர் உதவி மையத்திற்கு வந்ததும், நடவடிக்கை எடுப்பதற்காக அவை எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.வுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் இந்த விவகாரத்தில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்