< Back
தேசிய செய்திகள்
மும்மொழிக் கொள்கை: நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி கனிமொழி எம்.பி. நோட்டீஸ்
தேசிய செய்திகள்

மும்மொழிக் கொள்கை: நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி கனிமொழி எம்.பி. நோட்டீஸ்

தினத்தந்தி
|
11 March 2025 8:36 AM IST

மும்மொழிக் கொள்கை தொடர்பாக மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளது.

.புதுடெல்லி,

மத்திய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு எதிர்த்து வருகிறது. குறிப்பாக அதில் இடம்பெற்று உள்ள மும்மொழிக் கொள்கை மூலம் தமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக கூறி அந்த கொள்கையை ஏற்க மறுத்து வருகிறது. இதனால் மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளது.

இந்த பரபரப்பான சூழலில் நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2-வது பகுதி நேற்று தொடங்கியது. இதில் மும்மொழிக் கொள்கை பிரச்சினை புயலை கிளப்பியது. திமுக எம்.பி.க்கள்-மத்திய கல்வி மந்திரி இடையே விவாதம் நடந்தது. அப்போது திமுக எம்.பி.க்கள் நேர்மையாக இல்லை. ஜனநாயகத்துக்கு எதிராக இருக்கிறார்கள். நாகரிகமற்றவர்கள் என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் கூறினார்.

மந்திரி தர்மேந்திர பிரதானின் கருத்துக்கு தி.மு.க. மற்றும் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் அவையின் மையப்பகுதிக்கு சென்று கோஷமிட்டனர். மேலும் மத்திய மந்திரிக்கு எதிராக திமுக எம்.பி. கனிமொழி உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தார்.

இந்த நிலையில், மும்மொழிக் கொள்கை தொடர்பாக அவையை ஒத்திவைத்து விவாதிக்கக்கோரி திமுக எம்.பி. கனிமொழி இன்று நோட்டீஸ் அளித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கை தொடர்பாகவும் விவாதம் நடத்த கோரிக்கை வைத்துள்ளார். மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள்இன்று காலை போராட்டத்திலும் ஈடுபட உள்ளனர்.

மேலும் செய்திகள்