< Back
தேசிய செய்திகள்
கேதார்நாத் நிலச்சரிவில் பறிபோன உயிர்கள்... மீட்பு பணிகள் தீவிரம்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

கேதார்நாத் நிலச்சரிவில் பறிபோன உயிர்கள்... மீட்பு பணிகள் தீவிரம்

தினத்தந்தி
|
11 Sept 2024 1:26 AM IST

கேதார்நாத் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 5 பக்தர்கள் பலியானார்கள்.

கேதார்நாத்,

உத்தரகாண்ட் மாநிலம் ருத்தரபிரயாக் மாவட்டத்தில் உள்ள இந்துக்களின் மிக முக்கிய புனிதத்தலமான கேதார்நாத் கோவிலுக்கு, நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள், வந்து தரிசனம் செய்வார்கள். இந்நிலையில் சோன்பிரயாக்-கவுரிகுண்ட் இடையே சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள மான்குடியா பகுதியில். கேதார்நாத் கோவிலுக்கு வந்த பக்தர்கள் சிலர் பாதயாத்திரையாக நேற்று முன் தினம் திரும்பிக்கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக, அந்த நெடுஞ்சாலையில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சிக்கினர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் உள்ளூர் போலீசார் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர், மத்தியபிரதேச மாநிலம் தார் பகுதியை சேர்ந்த கோபால் (வயது 50) என்ற பக்தரின் உடல் மீட்கப்பட்டது. அந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு இருந்ததால், மீட்புப்பணி நிறுத்தப்பட்டது. பின்னர் நேற்று அதிகாலை தொடங்கிய மீட்பு பணிகள், காலை வரை நீடித்தது. இதில் மேலும் 4 பக்தர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இதில் 3 பேர் பெண்கள் ஆவர்.

பின்னர் நடந்த விசாரணையில் அவர்கள் மத்தியபிரதேச மாநிலம் காட் மாவட்டத்தை சேர்ந்த துர்காபாய் கபார் (50), நேபாளத்தின் தன்வா மாவட்டத்தின் வைதேகி கிராமத்தை சேர்ந்த டிட்லி தேவி (70), மத்தியபிரதேச மாநிலம் தார் பகுதியைச் சேர்ந்த சமன் பாய் (50), குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த பாரத் பாய் நிராலால் (52) என தெரியவந்தது.

மேலும் இடிபாடுகளில் இருந்து 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவர், காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். சில தினங்களாக கனமழை கொட்டுவதே நிலச்சரிவுக்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்