குஜராத்தில் தொல்பொருள் ஆய்வு தளத்தில் மண் சரிவு - ஐ.ஐ.டி. மாணவி உயிரிழப்பு
|குஜராத்தில் தொல்பொருள் ஆய்வு தளத்தில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி ஐ.ஐ.டி. மாணவி உயிரிழந்தார்.
காந்திநகர்,
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் சிந்து சமவெளி தொல்பொருள் ஆய்வு தளம் அமைந்துள்ளது. இங்கு ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக டெல்லி ஐ.ஐ.டி. மற்றும் காந்திநகர் ஐ.ஐ.டி.யைச் சேர்ந்த 4 பேர் கொண்ட குழுவினர் சென்றனர். அங்கு மாதிரிகளை சேகரிப்பதற்காக அங்குள்ள 10 அடி ஆழம் கொண்ட குழியில் அவர்கள் இறங்கியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மண் சரிவு ஏற்பட்டு 4 பேரும் மண்ணுக்கு அடியில் சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக மண்ணை அப்புறப்படுத்தி உள்ளே இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், சுரபி வர்மா(23) என்ற மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 3 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொல்பொருள் ஆய்வு தளத்தில் மண் சரிவு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.