'இந்தியா' கூட்டணியில் சேருமாறு நிதிஷ்குமாருக்கு லாலுபிரசாத் 'திடீர்' அழைப்பு
|நிதிஷ்குமார் 'இந்தியா' கூட்டணியில் தங்களுடன் சேர்ந்து பணியாற்றும் நேரம் வந்து விட்டதாக லாலுபிரசாத் யாதவ் கூறினார்.
பாட்னா,
கடந்த 2013-ம் ஆண்டு பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார், பா.ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகினார். லாலுபிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரீய ஜனதாதளத்துடன் இணைந்து மீண்டும் முதல்-மந்திரி ஆனார். 2017-ம் ஆண்டு, ராஷ்டிரீய ஜனதாதள உறவை துண்டித்துக் கொண்டு, மீண்டும் பா.ஜனதாவுடன் கைகோர்த்தார்.
2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மீண்டும் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகி, லாலுவின் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம், மீண்டும் பா.ஜனதாவுடன் கைகோர்த்தார். இப்படி 10 ஆண்டுகளில் நிதிஷ்குமார் 4 தடவை அணி மாறினார். இந்த ஆண்டு நடக்கும் பீகார் சட்டசபை தேர்தலை யார் தலைமையில் சந்திப்பது என்பது தொடர்பாக ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
இதை பயன்படுத்தி, நிதிஷ்குமாரை 'இந்தியா' கூட்டணிக்கு மீண்டும் வருமாறு ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ் அழைப்பு விடுத்துள்ளார். அவர் கூறியதாவது:-
நிதிஷ்குமார் 'இந்தியா' கூட்டணியில் எங்களுடன் சேர்ந்து பணியாற்றும் நேரம் வந்து விட்டது. அப்படி வந்தால், அவரது கடந்தகால தவறுகள் அனைத்தையும் நான் மன்னிப்பேன். அவருக்கு கதவு திறந்தே இருக்கிறது. அவர் தனது கதவுகளை திறந்தால்தான், இருதரப்பில் இருந்தும் ஆட்கள் நடமாட வசதியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.