நண்பரின் மகளை கற்பழித்து தாயாக்கிய தொழிலாளிக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை
|நண்பரின் மகளை கற்பழித்து தாயாக்கிய தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு,
பெங்களூரு கே.ஆர்.புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சிக்கதேவசந்திரா 1-வது கிராஸ் பகுதியில் வசித்து வருபவர் முரளி, கூலிதொழிலாளி. அதே பகுதியில் முரளியின் நண்பர் வசித்து வருகிறார். அவருக்கு ஒரு மகள் இருக்கிறாள். நண்பரை பார்க்க, அவரது வீட்டுக்கு முரளி அடிக்கடி சென்று வந்தார். அந்த சந்தர்ப்பத்தில் வீட்டில் தனியாக இருந்த நண்பரின் மகளான சிறுமியை முரளி கற்பழித்ததாக கூறப்படுகிறது. இதில் சிறுமி கர்ப்பமானாள். இந்த சம்பவம் கடந்த ஆண்டு (2023) நடந்திருந்தது. இதுபற்றி கே.ஆர்.புரம் போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதையடுத்து முரளியை போலீசார் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு பெங்களூரு போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நடந்த போதே முரளியால் கற்பழிப்புக்கு உள்ளான அந்த சிறுமிக்கு குழந்தையும் பிறந்திருந்தது. இந்த நிலையில், சிறுமி கற்பழிப்பு வழக்கில் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து பெங்களூரு போக்சோ சிறப்பு கோர்ட்டு நீதிபதி தீர்ப்பு கூறினார். அப்போது சிறுமியை முரளி கற்பழித்ததுடன், அவள் கர்ப்பமாக்கியது ஆதாரத்துடன் நிரூபணமாகி உள்ளது. அதனால் முரளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைதண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவும் பெங்களூரு மாவட்ட சட்ட சேவை ஆணையத்திற்கும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.