நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காங். சார்பில் 100 வீடுகள் கட்டித்தரப்படும்: ராகுல்காந்தி
|இதுபோன்ற மோசமான நிலையை கேரள மாநிலம் இதுவரை கண்டதில்லை என ராகுல்காந்தி கூறினார்.
வயநாடு,
கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி நேற்று பார்வையிட்டார். தொடர்ந்து 2-வது நாளாக நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ராகுல்காந்தி ஆறுதல் கூறினார். இந்த நிலையில், வயநாட்டில் ராகுல்காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
"மிகவும் மோசமான பேரிடர் நிகழ்ந்துள்ளது. நேற்று முதல் நான் இங்கு இருக்கிறேன். நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து வயநாடு மாவட்ட நிர்வாகத்தினரிடமும், பஞ்சாயத்து நிர்வாகிகளுடனும் இன்று ஆலோசனை நடத்தினேன். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் சார்பில் 100 வீடுகள் கட்டித்தரப்படும்.
இதுபோன்ற மோசமான நிலையை கேரள மாநிலம் இதுவரை கண்டதில்லை. இதனை டெல்லியிலும், இங்குள்ள முதல் மந்திரியிடமும் எழுப்புவேன். இது வேறு நிலை சோகம். இதை வேறுவிதமாக நடத்த வேண்டும்." என்றார்.